கொங்கு தேசத்தின் எண்ணற்ற பெருமைமிகுந்த திருத்தலங்களுள் ஒன்றாய் புகழ் பரப்புகின்றது சேவூர். ஈசனது வாகனமான ரிஷபம் இத்தலத்தினில் வழிபட்ட காரணத்தால் மாட்டூர் என்றிருந்தது. ஆதியில் ரிஷபாபுரி என்றும் போற்றப்பட்டுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளும் இத்தல ஈசனை "மாட்டூர் அரவா' என்று தனது ஊர்த் தொகையில் போற்றுகின்றார். சம்பந்தரும் இத்தலத்தை நினைவுகூர்ந்து பாடியுள்ளார்.
கோ என்பது பசுவையும், சே என்பது காளை மாட்டையும் குறிப்பதால், மாட்டூர் என்பது மருவி தற்போது சேவூர் என்று அழைக்கப்படுகின்றது. சோழர் காலத்தில் மலைகள் சூழ்ந்த கொங்கு நாட்டின் தலைநகரமாகவும் திகழ்ந்துள்ளது சேவூர். சோழர் ஆட்சியில் இவ்வூர் "செம்பியன் கிழானடி நல்லூர்' என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. கரிகால சோழன் தான் இழந்த சோழ நாட்டை இத்தல ஈசனை வழிபட்ட பின் அடைந்துள்ளான்.
இராமாயண காவிய வாலி இத்தல பெருமானை பூஜித்து, கிஷ்கிந்தையைக் கைப்பற்றி அரசன் ஆகியுள்ளான். அக்காலத்தில் இப்பகுதியில் காபாலிக சைவ வழி பாட்டு முறை வழக்கில் இருந்ததால் இத்தல ஈசர் கபாலீஸ்வரர் என்றும் அழைக்கப் பட்டுள்ளார். மாடும்- புலியும் சேர்ந்து விளையாடிய இத்தலத்தில் வாலி, நாரதர், வசிஷ்ட மகரிஷி, கருடன் ஆகியோர் வழிபட்டு திருவருள் பெற்றுள்ளனர்.
வாலியின் லிங்க பிரதிஷ்டை வானர அரசனான வாலி, கிஷ்கிந்தையின் அரசன். மிகவும் பலசாலி.
இந்திரனின் மகனான வாலி, தன்னுடன் போர்புரிபவரின் பாதி பலத்தை பெற்றிடும் வரத்தினை பெற்றவன். யாராலும் வெல்ல முடியாத இராவணனை தனது வாலால் சுற்றி வளைத்தவன்.
ஒருசமயம் கருத்த பெரிய உடலும், இரண்டு கொம்புகளும் கொண்ட துந்துபி என்னும் அரக்கன் சமுத்திரராஜனை சண்டைக்கு அழைத்தான். அவனோ, இவனை இமவானி டம் அனுப்பிவைக்க.... இமவானோ இவனை வெல்ல நம்மால் முடியாது என்று, வானரனான வாலியிடம் அனுப்பிவைத்தான். வாலி துந்து பியை தலைக்குமேல் தூக்கி சுழற்றி, தரையில் அடித்துக் கொன்றான்.
இதைக் கேள்விப்பட்ட அவனது தம்பி மாயாவி, வாலியிடம் போர்புரிந்தான். திடீரென மாயாவி ஒரு குகைக்குள் புகுந்தான். வாலியோ தம்பி சுக்ரீவனிடம் குகைக்கு வெளியே காவல் காக்கும்படி கூறிவிட்டு, உள்ளே சென்றான். மீண்டும் மாயாவிக்கும், வாலிக்கும் சண்டை மூண்டது. பல மாதங்கள் நீடித்தது. சண்டைபின் ஒருநாள் குகையின் வாயிலில் ரத்தம் வருவதைக் கண்ட சுக்ரீவன், அண்ணன் வாலி போரில் இறந்துவிட்டதாகக் கருதி குகையின் வாயிலை பாறையால் அடைத்துவிட்டு கிஷ்கிந்தைக்குத் திரும்பினான்.
போரில் வாலியின் கைகளால் வதைக்கப் பட்டான் மாயாவி. மாயாவியைக் கொன்ற பாவம் பிரம்மஹத்தி தோஷமாக வாலியை பிடித்தது. மூடி இருந்த பாறையை தன் பலத்தால் அகற்றி வெளியே வந்தான் வாலி. நேராக கிஷ்கிந்தைக்குச் செல்லாமல் வசிஷ்ட முனிவரிடம் சென்று தனக்கு ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்ய வேண்டினான். "நீ வனத்தின் வழியே செல். கடம்பவனம் வரும். அதில் எங்கு மாடும் - புலியும் ஒன்றாக விளையாடுகிறதோ அந்த இடம் தெய்வத்தன்மை நிறைந்த இடமாகும். அங்கு தீர்த்தம் உண்டாக்கி, சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட, உனது தோஷம் நீங்கும்'' என அறிவுறுத்தினார் வசிஷ்டர்.
அவ்வாறே வாலி காட்டின் வழியாக செல்லும்பொழுது மாட்டின் முதுகில் புலி விளையாடுவதைக் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தான். அவ்விடத்தில் தீர்த்தம் உண்டாக்கி, சிவலிங்க பிரதிஷ்டை செய்து, பூஜித்து, தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட்டான்.
தச்சனுக்கு அருளியதுஓர் ஏழை மரத்தச்சன் தனது தொழிலில் பெருத்த நஷ்டமடைந்தான். புதிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் குடும்பத்துடன் தனது வாழ்க்கையை மிகவும் கஷ்டப்பட்டு நடத்திவந்தான். ஒருசமயம் வியா பார நிமித்தமாக இந்த சேவூருக்கு வந்தான். அப்போது ஓர் அந்தணர் வடிவில்வந்த சிவபெருமான், அந்த தச்சனிடம் "தனக்கு ஐந்து மாட்டு வண்டிகள் வேண்டும். அதை சிறப்பாக செய்து தர வேண்டும்'' என்று கூறி அதற்குண்டான முழு தொகையையும் அவனிடம் கொடுத்துவிட்டு மறைந்தார்.
பெரிய தொகையும், சிறந்த வாய்ப்பும் கிடைத்ததால் மகிழ்ச்சி கடலில் மூழ்கினான். உடனே தனது இருப்பிடம் சென்று வண்டி தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டான். ஐந்து மாட்டு வண்டிகளை விரைவில் தயாரித்து முடித்து, அந்த வண்டிகளை சேவூருக்கு ஒட்டி வந்தான். வாய்ப்பளித்த அந்தணரை தேடினான். ஊர் முழுக்கத் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அப்போதுதான் உணர்ந் தான், அது எல்லாம்வல்ல அந்த ஈசனது திரு விளையாடல் என்று.
அக்னி தாண்டவம்
ஆதியில் இத்தலத்தில் நடராஜபெருமான் அக்னியின்மீது நின்றபடி அக்னி தாண்டவத்தை அரங்கேற்றியுள்ளார். இந்த தாண்டவத்தை காணவந்த தேவர்களும், முனிவர்களும் வெப்பம் தாங்கமுடியாமல் ஒளிந்துகொண்ட இடமே திருப்புக்கொலியூர் என்னும் அவிநாசி திருத்தலமாகும். இதனால் இந்த சேவூர் திருத்தலம் மத்திய சிதம்பரம் என்று போற்றப்பட்டுள்ளது. தமிழில் நடுசிதம்பரம் என்றும் அன்பர்கள் அழைப்பர். சிதம்பரம், பேரூர், சேவூர் என்கிற சொல் வழக்கமும் இப்பகுதியில் உண்டு.
ஆலயம்
ஊரின் வடகிழக்கு திசையில் பெரிய அளவிலான குளம் வாலி தீர்த்தம் என்கிற பெயரில் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு வெளிப்புறம் பழமைவாய்ந்த அரச மரம் ஒன்று உள்ளது. அதனடியில் நாகர் சிலை களும், அரசடி விநாயகரும் வீற்றுள்ளனர். தீப ஸ்தம்பம் நெடிதுயர்ந்து நிற்பதை பார்க்கி றோம். அதன் அடிப்பகுதியில் வாலி இங்கு சிவலிங்க பூஜை செய்ததை விளக்கும் சிற்பம் அற்புதமாக புதைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரத்துடன் ஆலயம் அழகுற காணப்படு கிறது. உள்ளே விசாலமான இடம். நேராக கொடிமரம் பலிபீடம் மற்றும் நந்திதேவர். முகமண்டபம் வடக்குத் தெற்காக நீர் வாக்கில் கட்டப்பட்டுள்ளது. இங்கே வடக்கு நோக்கியப்படி நால்வர் தரிசனம். சுவாமி சன்னதி சிறிய அளவில் அமையப்பெற்றுள் ளது. கருவறையில் சிறிய லிங்க வடிவில் பேரருள் புரிகின்றார் ஸ்ரீ வாலீஸ்வரர்.
ஈசனது தரிசனம் முடித்து வெளியே வந்தால், முன்மண்டபத்தை ஒட்டி அமைந்துள்ளது கந்தன் சன்னதி. சேவல் கொடியின்றி சேவலைக் கையில் ஏந்தியபடி வள்ளி மற்றும் தெய்வானையுடன் சிம்ம பீடத்தின் மீது நின்றவண்ணம் காட்சி தருகின்றார் கந்தசுவாமி. அடுத்ததாக கிழக்கு நோக்கிய தனி சன்னதியில் கருணை புரிகின்றாள் அன்னை ஸ்ரீ தர்மசம்வர்தினி.
தீந்தமிழில் அறம் வளர்த்தநாயகி என்று போற்றப்படுகின்றாள்.
அம்மையை வணங்கிய பின், வலது புறம் திரும்பிட அன்னை சிவகாமியுடன் ஆடலரசரின் அற்புத தரிசனம். இவருக்கு நேராக தென்வாயில் ஒன்றும் உள்ளது. இங்கு சிவனுக் கும், அம்பிகைக்கும் நடுவில் கந்தன் குடிகொண்டிருப் பதால் இது சோமாஸ்கந்த தலமாகப் புகழப்படுகின்றது. தென்மேற்கு மூலையில் ஸ்ரீ அனுக்ஞை விநாயகர் திருக் காட்சி தருகின்றார்.
மேற்கு திருமாளிகை பத்தியில் பஞ்சபூத ஸ்தல லிங்கங்களும், சகஸ்ர லிங்கமும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. தனிச் சன்னதியில் ஸ்ரீ தண்டபாணி சுவாமி திருவருள் புரிகின்றார்.
அருகே நாகர் சிலைகளும் உள்ளன. வடக்குப் பிராகாரத்தில் ஸ்ரீ சனிபகவான் மேற்கு நோக்கிய சன்னதியில் அருள்பாலிக்கின்றார்.
ஈசான திசையில் நவகிரகங்களும், ஸ்ரீ காலபைரவரும் உள்ளனர். அம்பாள் சன்னதிக்கு நேராக தோரணவாயில் அமைக்கப்பட்டுள் ளது. இராஜகோபுரத்திற்கு வலது- இடது புறங்களில் சூரிய- சந்திரர்கள் காணப்படுகின்றனர்.
இத்தல பெருமானை வழிபட, அரச பதவிகள் தேடிவரும். தொழில் முன்னேற்றம், ஆயுள் விருத்தி, இழந்த பதவி மீண்டும் கிடைத்தல், திருமணம் மற்றும் புத்திரபாக்கியம் கிடைக்கவும் இங்கு வேண்டிக்கொள்கின் றனர். இங்கு முருகருக்கு ஆறு செவ்வாய்க் கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட, திருமணத்தடை விளகுகிறது. அம்பிகைக்கு பௌர்ணமி யில் பாலாபிஷேகம் நடத்தி, குங்கும அர்ச்சனை செய்து வழிபட மாங்கல்யம் நிலைக்கும்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இருந்து புஞ்சைபுளியம்பட்டி செல்லும் பேருந்து சாலையில் 13 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது சேவூர். கோவையிலிருந்து கோபி மற்றும் அந்தியூர் செல்லும் பேருந்துகளில் சேவூர் இறங்கலாம்.